தனது விளைச்சல் நிலத்திலிருந்து விவசாயி ஒருவர் கைப்பற்றிய வைரத்தை 2 கோடிக்கு விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிரி, மஹாதேவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர், வைரக்கற்கள் தானாக வெளிவருவதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு விவசாயி ஒருவர் ரூ.60 லட்சம் வைரத்தை உள்ளூர் வணிகரிடம் அதிக தொகைக்கு விற்றதாக தகவல் வெளியானது. அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி 2 வைரக்கற்களை கண்டெடுத்து அதை விற்றதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள வைரக் கற்களை எடுப்பதற்கு கூடாரம் அமைத்து தேடி வருகின்றனர். விவசாயி ஒருவர் தன் விவசாய நிலத்தில் 30 கேரட் வைரத்தைக் கண்டுபிடித்ததாகவும், அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வியாபாரியிடம் ரூ. 2 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.