நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள், அதாவது 31 -ம் தேதி அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரது அறிவிப்புக்காக அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை தாம் கைவிடுவதாகவும், அதற்காக ரசிகர்களும், பொது மக்களும் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம் காட்டினார்.
மேலும், கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் தன்னை நம்பி தன் கூட வந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பலரும் பல சிக்கல்களையும் என்றும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.அதனால் அனைவருக்கும் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்படும் என விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் இந்த முடிவை ரசிகர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அவரது வீட்டுமுன்னர் அமர்ந்து , தலைவா அரசியலுக்கு வாங்க என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தர்ணாவில் ஈடுபட்டுள்ள ரசிகர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.