சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இனி வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
வரும் 20, 21, 22ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. பல ஊர்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் தாண்டி பதிவாகி உள்ளது. ஈரோடு நகரத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் பதிவாகியுள்ளது. சென்னை, கோவை, தருமபுரி, கன்னியாகுமரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பு விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் பதிவாகியுள்ளது. இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும் இதன் காரணமாக ஏப்ரல் 20 முதல் 23 வரை தென் தமிழகம், வட தமிழகம், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவக்கூடும். குறைந்த பட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.