பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பார்ப்பது போல் வந்த பெண் ஒருவர் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. கட்டைப்பையில் குழந்தையை எடுத்துச் செல்லும் பெண்ணுடன் ஒரு சிறுவனும் சென்றது சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தன் – சின்னி தம்பதிக்கு கடந்த 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகள் வார்டில் சின்னி குழந்தையுடன் இருந்துள்ளார். அவரது கணவர் உணவு வாங்கி வருவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது சின்னி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தை அழுததாக சொல்லப்படுகிறது. அப்போது நீங்கள் சாப்பிடுங்கள், நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன் என்று பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது திடீரென குழந்தையுடன் அவர் மாயமானார். அதன் பிறகு சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது தான் அந்த பெண், குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.