வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. அதோடு மட்டுமல்லாமல் சூறை காற்றும் வீசியதால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கோடை காலத்தில் அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழையில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக சூறைக்காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் பிய்த்துக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்திலும் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தென்னை மரங்கள் மீது இடி விழுந்ததால் மரத்தில் இருந்த குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.