“உழுது உண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுது உண்டு பின்செல் பவர்”
அதாவது, உழவுத் தொழிலைச் செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்கள் எல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து பிழைக்கும் அடிமைகள் ஆவார்கள் என்பது திருவள்ளுவரின் வாக்கு.
அதன் அடிப்படையில் வேளாண்மையும், அதன் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்து, தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
மனித குலத்திற்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை அர்ப்பணிக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியிருப்பது வரவேற்கதக்கது.
தமிழ்நாட்டில் விளைநிலங்கள் வீட்டுமனையாக மாறி வருவதன் ஆபத்தை உணர்ந்து, விவசாய சாகுபடி பரப்பை 75 விழுக்காடாக உயர்த்தப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு, 10 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் ஹெக்டராக உயர்த்த இலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால், விவசாய உற்பத்தி பொருட்களை அதிகரிப்பதோடு, அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்கும் அவலநிலையை போக்க முடியும்.
நெல்லுக்கான அதரவு விலையை உயர்த்துவதன் மூலமாக, விவசாயிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும். கரும்பு கொள்முதல் டன்னுக்கு ரூ.2,750-ல் இருந்து, 2,900 ஆக உயர்வு, விவசாயிகள் புதிய வகை கரும்பு ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகள் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்துக்காக ரூ.114.68 நிதி ஒதுக்கீடு, ரூ. 1 லட்சம் வரை 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு, மானியத்தில மின்மோட்டார் பம்பு செட்டுகள் திட்டம் சார்பாக விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம், 50 உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கீடு ஆகிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.
ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அதன் வாயிலாக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது, தமிழ்நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான தொடங்கப்புள்ளியாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. தமிழ் வழி பயிலும் மாணவர்களில் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகத்தின் மூலம் வேளாண் தொடர்பாக முழுமையான புரிதலை மாணவர்களிடையே ஏற்படுத்த முடியும்.
நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும், வேளாண்துறைக்கு இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கம், இடுபொருள் மானியம் உள்ளிட்டவைகள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியான, பண்ருட்டியில் பலாவிற்கான சிறப்பு மையம் அமைப்பதோடு, பண்ருட்டி பலாவிற்கு புவிசார் குறியீடு அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, நெல் ஜெயராமனின் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உருவாக்கம், சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், டெல்டா மாவட்டங்களில் உள்ள தென்னை விவசாயிகளுக்காக தஞ்சையில் தென்னை மதிப்புக் கூட்டும் மையம், தமிழ்நாட்டில் பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த ரூ.3,327 கோடி ஒதுக்கீடு, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
மொத்தமாக, விளைப்பொருட்களுக்கான சந்தை வசதியை முறைப் படுத்துதல், லாபகரமான விலைக்கு உத்தரவாதம், மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதி, பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.