புதுடெல்லி, செப் 27:
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் மூன்ற் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு முதல், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி நாடு முழுவதும் இன்று 10 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டத்தின் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் இல்லாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.