“தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “ வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள். மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன்மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும். வாழ்த்துகள் @mkstalin ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் துறைக்கான இந்த தனி பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் வரவேற்க்கத்தக்க அம்சங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வாரின் வழிக்காட்டுதலுடன் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கோவையில் ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு தேசிய அளவில் சிறந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டையும், மத்திய, மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.