ஷவர்மாவினால் உயிரிழந்த மாணவி இறப்புக்கு காரணம் என்ன?

Filed under: Uncategory |

ஷவர்மா என்ற உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி கேரள மாநிலம் காசர்கோட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செருவத்தூர் எனும் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி தேவநந்தா. உறவினர் வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

தேவநந்தாவும் அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து கரிவலூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பரிசோதித்ததில் அவர்கள் அனைவரும் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிறுமி தேவநந்தா சிகிச்சை பலனின்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சென்ற போலீஸார் அங்கு உணவு சமைத்தவரை கைது செய்ததுடன் கடைக்கும் சீல் வைத்தனர்.
மேலும் கேரளாவில் உள்ள ஷவர்மா கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்ட ஷவர்மா கடை உரிமையாளர் மற்றும் ஷவர்மா தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஷவர்மா சாப்பிட்டதாக பலியான மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அசுத்தமான தண்ணீரில் இந்த பாக்டீரியா இருந்ததாகவும், அந்த தண்ணீர் ஷவர்மாவில் கலந்து இருப்பதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.