ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இந்தியர்கள் உட்பட 805-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்புப் பணி வேகமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் முஸ்லிம்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த நெரிசலில் சிக்கி 14 இந்தியர்கள் பலியானதை ஜெட்டாவில் உள்ள தூதரக அலுவலர் உறுதி செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “ஹஜ் புனித் யாத்திரை நெரிசலில் சிக்கி இதுவரை பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெட்டா தூதரக அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இறுதியான பலி எண்ணிக்கை சவுதி அதிகாரிகள் தகவல் அளித்தால் மட்டுமே உறுதியாகும். மேலும், 13 இந்தியர்கள் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்கள் விபரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் இவ்விபத்தில் பலியானதாக கேரள அமைச்சர் கே.சி.ஜோசப் உறுதி செய்துள்ளார்.
தெலங்கானா மாநில ஹஜ் கமிட்டி தலைவர் எஸ்.ஏ.சுக்கூர் கூறும்போது, “ஹைதராபாத்தைச் சேர்ந்த பிபி ஜான் என்பவர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்:
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதின் முகமது இப்ராகிம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த முகைதீன் பிச்சை மற்றும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ரெமிஜன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
அவசர உதவி எண்கள்:
ஹஜ் யாத்திரை சென்றவர்களின் உறவினர்கள் கூடுதல் தகவல் களை பெற 00966125458000, 00966125496000 ஆகிய அவசர உதவி எண் களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது