சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிச் செல்வது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கைப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதுடன், உடன் பயணிப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், ஹெல்மெட் அணியத் தவறினால், இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யடும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. காவல்துறையினரிம் கெடுபிடிகளுக்கும், வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதாலும் இன்று காலை முதலே பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தபடியே இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போதும், வெளியே கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போதும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தபடியே சாலையில் பயணிப்பதை காண முடிகிறது.
ஆனாலும், அரசின் உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை சாலைகளில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.