13.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Filed under: சென்னை,தமிழகம் |

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள 15 சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627 மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அன்று (14.08.2021) மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார்.

தொழில்துறையில் இந்திய துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன், 1971 ஆம் ஆண்டிலேயே, அயராது உழைத்து தொழிற்பூங்காவின் உருவாக்கத்திற்கு தொடக்கப்புள்ளி வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவார். அன்று கலைஞர் தொடங்கிய தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இன்றும் தமிழ்நாட்டை பொலிவுறச் செய்து மணங்கமழச் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் பசுமை பொலிவினை ஏற்படுத்தவும், காற்று மாசுபாட்டினை குறைக்கவும் வழிவகை செய்யும் வகையிலும் சிப்காட் நிறுவனம் நீடித்து நிலைபெறத்தக்க வகையிலான வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட, தற்போது 15 தொழிற்பூங்காகளில் ருபாய் 13.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 3 இலட்சம் மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில் சிப்காட் ஓரகடம் தொழிற் பூங்காவில் 14.08.2021 அன்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மரகன்றுகளை நட்டு வைத்து சிறப்பு செய்தார்கள். இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் புங்கன், நாவல், நீர்மருது, இலுப்பை, மகிழம், பூவரசன், புலியன், பாதாம், மந்தாரை, ஆலம், அரசன், டவுபியா, மயில், சொர்கம், ஸ்பேத், நெல்லி, ஈட்டி, ஏழிலை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி 100 நாட்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து, கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளித்து, பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் கையாண்டு, மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த பல்வேறு சமூக நலத்திட்டங்களையும் நிறைவேற்றி, வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கும் அரசின் 100ஆவது நாள்  (14.08.2021) நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதை நினைவுகூறும் வகையில் “தலைநிமிரும் தமிழகம் பேரு சொல்லும் 100 நாட்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் தொழிற்துறை சார்பில் இன்று 3,04,627 மரக்கன்றுகளை ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் நடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் முதற்கட்டமாக இன்று ஒரகடத்தில் ஏறத்தாழ 62 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 ஒரகடம் பகுதியில் மாத்தூர் கிராமத்தில் முதற்கட்டமாக (Phase – I) ஏற்கனவே 13 ஏக்கர் நிலப்பரப்பில் நடப்பட்ட 6250 மரக்கன்றுகளின் வளர்ச்சி நிலையினை தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழிற்துறை முதன்மைச் செயலர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., சிப்காட் நிறுவன மேலாண் இயக்குநர் த.ஆனந்த், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., சட்ட மன்ற உறுப்பினர்கள் (திருப்பெரும்புதூர்) கு.செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், Greenery ஆலோசகர் தங்கபிரகாசம், சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவ இரக்கம், ஒரகடம் திட்ட அலுவலர் காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.