மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

Filed under: சென்னை,தமிழகம் |

சென்னை, ஏப்ரல், 21

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறைந்த மரு.சைமன் அவர்களின் சடலத்தினை அடக்கம் செய்ய சென்றபோது, அன்னாரின் உறவினர்கள், சவ ஊர்தி ஓட்டுநர், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட 21 நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ கழகத்தின் நிர்வாகிகளும்,  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளும் தங்களது நன்றியினை அரசுக்கு தெரிவித்தார்கள். மேலும், மேற்காணும் இரு சங்கங்களும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை பணியாளர்களின் பணி பாதுகாப்புத் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்தனர்.

மேற்காணும் கோரிக்கைகளை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலாளர் டாக்டர் பீலா இராஜேஸ், தமிழ்நாடு காவல் துறை தலைவர் ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டாக்டர் க. குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ச.குருநாதன், இந்திய மருத்துவ கழகத்தின் சார்பாக மரு. சி.என்.இராஜா, மாநிலத் தலைவர், மரு.என்.முத்துராஜன், மாநில தெடர்பு அலுவலர் மற்றும் மரு. சி. அன்பரசு, துணைச் செயலாளர் அவர்களும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக மரு. ஜி. சந்திரசேகர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *