7 உலக அதிசயங்களை 6 நாட்களில் சுற்றி சாதனை!

Filed under: இந்தியா,உலகம் |

6 நாட்களில் உலகின் 7 அதிசயங்கள் என வர்ணிக்கப்படும் 7 பகுதிகளை பிரிட்டனை சேர்ந்தவர் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பண்டைய மக்களால் உலகம் முழுவதிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான கட்டிட, கட்டுமான அதிசயங்கள் உள்ளன. அவற்றில் உலகின் 7 அதிசயங்களாக இந்தியாவில் உள்ள தாஜ்மஹால், சீன பெருஞ்சுவர், இத்தாலியில் உள்ள கொலிஜியம், ரியோவில் உள்ள இயேசு சிலை, பெரு நாட்டில் உள்ள மச்சுபிச்சு, மெக்ஸிகோவில் உள்ள சிச்சென் இட்ஸா மற்றும் ஜோர்டனில் உள்ள பெத்ரா ஆகிய பகுதிகளாகும். உலகின் வெவ்வேறு கண்டங்களில் வெவ்வேறு நாட்டில் உள்ள இந்த 7 அதிசயங்களையும் சுற்றி பார்ப்பது என்பது பெரிய சவாலானது. அதை ஒரு வாரத்திற்கு செய்வது என்ற சாதனையைதான் கையில் எடுத்து சாதித்தும் காட்டியுள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஜிம்மி மெக்டொனால்ட். உலகின் 7 அதிசயங்களையும் எவ்வளவு வேகமாக சுற்றி வர முடியும் என்ற முயற்சியை அவர் மேற்கொண்டார். அதன்படி 7 அதிசயங்களையும் சுற்றி பார்க்க அவர் மொத்தமாக 6 நாட்கள், 16 மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த குறுகிய காலத்திற்குள் இத்தனை நாடுகளுக்கு பயணித்து உலக அதிசயங்களை சுற்றி பார்த்த அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இந்த 7 அதிசயங்களுக்கும் இடையேயான சுமார் 36,780 கி.மீ தொலைவை ஜிம்மி 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரயில்கள், 16 டேக்சிகளை பயன்படுத்தி கடந்துள்ளார்.