ஈரோடு: தமிழக அரசு, கூட்டுறவு பயிர் கடனை தள்ளுபடி செய்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில், 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக சட்டசபையில் கடந்த, 5ல் முதல்வர் பழனிசாமி, ‘கூட்டுறவு வங்கிகளில், 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வதாக’ அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பயனடையும், விவசாயிகள் பட்டியலை ஒருங்கிணைத்து வருகின்றனர்.இது குறித்து, ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், விவசாயிகள் வாங்கிய பல்வேறு பயிர் கடனில், தகுதியான விவசாயிகள் பட்டியல் தயாரிக்கிறோம். சில விவசாயிகள், பல்வேறு இனங்களில் பயிர் கடன், நகைக்கடன், வாகன கடன் என, ஒரே கணக்கில் பெற்றிருப்பர்.
அவற்றில், தகுதி அடிப்படையில் பட்டியலிட்டு வரும், 13ல் அரசுக்கு இறுதி பட்டியல் அனுப்பி வைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில், 95 ஆயிரம் விவசாயிகள் பெற்ற, 1,045 கோடி ரூபாய் தள்ளு படியாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அளவில், அதிக பயிர் கடன் பெற்ற மாவட்டத்தில் ஈரோடு, கோவை போன்றவை உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.