விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் நிறுவனம் பால் வினியோகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆவின் பால் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலுக்கு மாறியுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் மட்டும் இன்னும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்து வருகிறது. இது பற்றி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமுல் போன்ற நிறுவனங்கள் தற்போது கண்ணாடி, டெட்ரா பாக்கெட்டுக்களில் விற்பனை செய்து வரும் நிலையில் ஆவின் நிறுவனம் ஏன் கண்ணாடி பாட்டிலில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு தரப்பு விளக்கம் கூறிய போது, “பிளாஸ்டிக் பாக்கெட்டை தடை செய்ய தயார். ஆனால் அதே நேரத்தில் இதற்கு விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தது. இதையடுத்து விரைவில் ஆவின் பால் கண்ணாடி பாட்டிலில் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.