போலீசார் கொடைரோடு அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட குட்கா பொருட்களை தனிப்படை மூலம் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வழியாக ஓசூரிலிருந்து காரில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின்படி போலீசார் அதிகாலை 3 மணி முதலே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு அருகே திண்டுக்கலிருந்து- மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரிலிருந்து மதுரைக்கு கார் ஒன்று சென்றுள்ளது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அக்காரில் குட்கா இருப்பது தெரியவந்தது. மேலும் சுமார் 270 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து காரை ஓட்டி வந்த சின்ன சேலம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை ஒப்படைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் காரை ஓட்டி வந்த சிவகுமார் வெறும் கார் ஓட்டுநர் என்பதும் ஓசூரில் இருந்து குட்கா பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான கூலி மட்டுமே தனக்கு வழங்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர் யார்? யாருக்காக இந்த பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.