கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை என ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 350 ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
மோடி பேசியதாவது: “கல்வி கற்பித்தல் வெறும் பணி அல்ல, அது வாழ்வியல் முறை. மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். அவர்களது நாட்டத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. புதிய தலைமுறையினரை உருவாக்குவதில் அவர்கள் ஆவலோடு செயல்படுகின்றனர்.
சமூகம் முன்னேற வேண்டுமென்றால், ஆசிரியர்கள் காலத்தைவிட இரு மடங்கு வேகமாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
நான் குஜராத் முதல்வரான பிறகு எனக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று, என் ஆசிரியர்களை நேரில் சந்தித்து கவுரவிக்க வேண்டும், மற்றொன்று எனது பள்ளி நண்பர்களை சந்திக்க வேண்டும் என்பது. இரண்டையுமே நான் செய்துவிட்டேன்” இவ்வாறு மோடி பேசினார்.