அக்டோபர் 15ம் தேதி தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி சார்பிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில், “ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியில் மட்டுமே தேர்வு நடத்த பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி படித்தால் மட்டுமே வேலை என்ற நிலையை உருவாக்கி இந்தியா முழுவதும் இந்தி கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த முயல்கிறது. ஒன்றிய பாஜக அரசு இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்திற்கும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்று பாஜக அரசுக்கு புரிய வைக்க உள்ளோம். எனவே இந்தியை திணிக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி இணைந்து அக்டோபர் 15ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.