சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் திபேத் துறவி போல தங்கி ஏமாற்றியதால் டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு டில்லியிலுள்ள மஞ்சு கா டிலா என்ற பகுதியில் திபேத் அகதிகள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு டோல்மா லாமா என்ற பெயரில் திபேத்திய துறவியாக பெண் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் திபேத்திய துறவி இல்லை என்று தெரியவந்துள்ளது. நேபாள குடியுரிமை குறித்த சோதனையை மேற்கொண்டபோது அவர் போலியான ஆவணங்களை தயாரித்து இந்தியாவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டில்லி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் பெயர் கய் ருவோ என்றும், சீனாவின் ஹைனான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 2019ல் இந்தியாவிற்குள் நுழைந்த அவர் போலி ஆவணங்களை தயாரித்து தன்னை துறவி போல மாற்றிக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.