தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ம் தேதியன்று சூரிய கிரகணம் -ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அக்டோபர் 25ம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, யூரல்ஸ், மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, தெற்காசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் மறைந்துவிடாது. எடுத்துக்காட்டாக வெறும் 9.7% சூரிய முகம் மட்டுமே சென்னையிலிருந்து காணும்போது அதிகபட்சமாக மறையும். மேற்கு அடிவானத்தை தெளிவாக காணக்கூடிய பகுதியில் நின்று நோக்கினால் மாலை 5 மணிக்கு கிரகணம் துவங்குவதை காணலாம். ஒரு ஆப்பிள் கடித்ததை போல சூரியனின் முகத்தில் ஒரு பகுதியில் சற்றே நிழல் காணப்படும். கிரகணம் முடிவதற்குள் சூரியன் மறைந்துவிடும் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே தமிழகத்தில் காண முடியும்.