66-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
முன்னதாக அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்பு அளித்தனர். முப்படைத் தளபதிகள் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார்.
சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அசோக சக்ரா விருதுகள்
காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அசோக சக்ரா விருது வழங்கினார். மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி விருதினை பெற்றுக் கொண்டார்.
இதேபோல், தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான நீரஜ் குமார் சிங்குக்கும் அசோக சக்ர விருது வழங்கப்பட்டது.
ராணுவ அணிவகுப்பு
விருதுகளை வழங்கிய குடியரசுத் தலைவர் ராஜ்பத் மைதானத்தில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு வருகிறார்.
முதல் முறை:
நாட்டில் முதன் முறையாக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையைச் சேர்ந்த வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பும் நடைபெற்றது.
கோலாகலமாக அணிவகுத்த காட்சி ஊர்திகள்:
இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தர்காண்ட், அசாம், ஜார்க்கண்ட், சிக்கிம், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், ஹரியானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், குஜராத், மேற்குவங்கம் ஆகிய 16 மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் காட்சி ஊர்திகள் அணிவகுத்தன.
தமிழகம், கேரள உள்ளிட்ட மாநிலங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு சிறந்த காட்சி ஊர்திக்கான விருதினை மேற்கு வங்க மாநிலம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.