மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என்றும் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி மதுரை காம ராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவரது நிய மனத்தை எதிர்த்து பேராசிரியர் ஜெயராஜ் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கல்யாணி நியமனத்துக்கு தடை விதித்தது.
இதை எதிர்த்து கல்யாணி மதிவாணன் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபதாயா மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு விவரம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக நியமிக்க, ஜெயராமன், கல்யாணி, ராமசாமி ஆகிய மூவர் பெயரை தேர்வுக்குழு பரிந் துரை செய்தது. அதில் கல்யாணி துணைவேந்தராக நியமிக்கப் பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டம் 1965-ன் படி, துணைவேந்தர் பதவி ஓர் அதிகாரி பதவியாகும். இச்சட்டத்தின் படி, கல்யாணி நியமிக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை.
யுஜிசி சட்ட விதிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்லூரி கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கு கட்டாயமாக பொருந்தும். அதேநேரம் மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி விதிமுறைகள் பரிந்துரை அடிப்படையிலானதே தவிர, கட்டாயமல்ல.
யுஜிசி விதிமுறைகளை மாநில அரசு ஏற்றுக் கொள்ளாதவரை, அது மாநில பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது. எனவே, கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டது செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.