மதுரா: பா.ஜ.க. ஆட்சியில் ஊழலுக்கு முடிவு கட்டி இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி பதவி ஏற்றது. மோடி அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டு நிறைவை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் ஒரு வாரம் பெரிய அளவில் 200 பொதுக்கூட்டங்களும், 5 ஆயிரம் சிறிய கூட்டங்களும் நடத்தப்பட உள்ளது.
இதில், முதல் பொதுக்கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள நாக்லா சந்திராபன் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, ”காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஊழல்கள் அம்பலமாயின. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல், விளையாட்டில் ஊழல் (காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்) என பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் சிறை சென்றனர். ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் அப்போது ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அது மிகவும் மோசமான நாட்கள்.
கடந்த ஆண்டு மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்காவிட்டால் இந்த நாடு இன்னும் அதலபாதாளத்துக்கு சென்று இருக்கும். அந்த ஆட்சி மேலும் ஓர் ஆண்டு நீடித்து இருந்தால் கூட இந்த தேசமே மூழ்கிப்போகும் நிலை ஏற்பட்டு இருக்கும். கடந்த 60 ஆண்டுகளாக டெல்லியில் அவர்களுடைய குரல்தான் ஓங்கி ஒலித்தது. அவர்களுடைய விருப்பப்படிதான் இந்த தேசம் ஆளப்பட்டது. அந்த மோசமான நாட்கள் முடிந்து, நாட்டுக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது. ஆனால் இந்த தேசத்தை கொள்ளையடித்தவர்களுக்கு வரும் காலம் நன்றாக இருக்குமா என்பதற்கு என்னால் உத்தரவாதம் அளிக்கமுடியாது.
இந்த நாட்டை, உங்களுடைய பணத்தை யாரும் கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எனது ஆட்சியில் அதிகார மையங்கள் குறைந்து உள்ளன. எங்கள் ஆட்சியில் ஊழலுக்கு முடிவுகட்டி இருக்கிறோம். அரசியல் தலைவரின் மகனோ அல்லது மருமகனோ ஊழல் செய்தார்கள் என்பதெல்லாம் கிடையாது. எங்களுடைய கடந்த ஓராண்டு கால ஆட்சியில் ஏதாவது ஊழல் நடந்ததாகவோ, உறவினர்களுக்கு சலுகைகள் அளித்ததாகவோ நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல, பிரதம காவலன். கங்கையும், யமுனையும் என் தாய் போன்றவர்கள். இந்த நதிகளை சுத்தம் செய்யவேண்டும். இதற்கு மக்களின் உதவியும், ஒத்துழைப்பும் தேவை.
விலைவாசி உயர்வை நாங்கள் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து இருக்கிறது. இடைத்தரகர்களை ஒழித்து இருக்கிறோம். அபிவிருத்தி திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயும் முழுமையாக மக்களை சென்று அடைவதை நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். நாட்டில் வறுமையை ஒழிப்பதில் உறுதிபூண்டு இருக்கிறோம். விவசாயிகள் தற்கொலை பிரச்னையை அரசியல் ஆக்க விரும்பவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் விவசாயிகள் ஏன் பிரச்னையில் தத்தளிக்கிறார்கள் என்பதற்கு தீர்வுகாண விரும்புகிறேன்.
நான் ஆட்சிக்கு வந்தபோது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ரூ.20 ஆயிரம் கோடி அரசு கருவூலத்தில் முடங்கிக்கிடந்தது. தற்போது, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்கள் வேலையை விட்டு விலகும் பட்சத்தில் அவர்களுக்கான தொகை உடனே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மாதம் ஒரு ரூபாய் செலுத்தி ரூ.2 லட்சம் காப்பீடு பெறும் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம். நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் உரிய அதிகாரங்களை வழங்க விரும்புகிறோம். நடைமுறையில் இல்லாத 1,300 பழைய சட்டங்களை நீக்க இருக்கிறோம்” என்றார்.