சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும்.
இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக, 54 வயதை எட்டிய சந்தாதாரர்கள் வேலையிலிருந்து விலகினாலும் பிஎப் தொகையை உடனடியாக எடுக்க முடியாது. 58 வயதான பிறகே பிஎப் தொகையை எடுக்க முடியும்.
இதுபோல, வீடு கட்டுதல் அல்லது வாங்குதல், தனது அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் முக்கிய மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி செலவு அல்லது திருமணம் ஆகியவற்றுக்காக பிஎப் தொகையை திரும்பப் பெறவும் இந்த புதிய அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையை (3.67%) வெளியில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கைக்கு தொழிற்சங்கங்களும் இதர அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஏப்ரல் 30 வரை இந்த அறிவிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. பின்னர் மே 31 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, புதிய அறிவிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமூக இணையதளங்கள் மூலமும் இது தொடர்பாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தப் பிரச்சினை தீவிரமடைந்ததையடுத்து, புதிய அறிவிக்கை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு (ஜூலை 31 வரை) ஒத்தி வைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.
இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎப் நிதியில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட புதிய அறிவிக்கை ஜூலை 31 வரை ஒத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும். அது ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” என கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிஎப் தொகையை திரும்ப எடுப்பது தொடர்பான அறிவிக்கைக்கு சந்தாதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.