பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வரவு, செலவுகள் ஏனைய நிர்வாகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை மாநகராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு இனி தனியார் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. அதேசமயம் தனியார் ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்தில் உணவை வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவை வழங்கினால், உணவு அளவு குறைந்தால், தரம் குறைவான உணவு பொருட்கள், காய்கறிகளை பயன்படுத்தினால், உணவு கூடத்தில் தூய்மையை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் உள்ளதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.