தலைமறைவாக இருந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் முயற்சித்தபோது அவர்கள் அரிவாளால் தாக்கியதால் போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன் மீது களக்காட்டில் நடந்த கொலை தொடர்பான வழக்கு உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக உள்ள ரவுடி சிவசுப்ரமணியனை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் சிவசுப்ரணியன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து திருநெல்வேலி தனிப்பிரிவு போலீசஸார் இன்று அதிகாலை குள்ளம்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சிவசுப்ரமணியன் மற்றும் கும்பலை சுற்றி வளைத்தனர். போலீஸ் சுற்றி வளைப்பதை அறிந்த ரவுடிகள் அரிவாளோடு போலீசாரை தாக்க பாய்ந்துள்ளனர். இதனால் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் ரவுடிகளை சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய ரவுடிகள் அனைவரும் ஓடி தலைமறைவாகியுள்ளனர். இந்த மோதலில் போலீசாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பிடிக்கவந்த போலீசாரை ரவுடிகள் தாக்க முயன்றதால் எழுந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.