திருச்சியில் 3மணி மண்டபங்கள் திறப்பு: இது அனைவருக்குமான அரசு என முதல்வர் நிரூபித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,
திருச்சி காவிரி பாலப் பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தோடங்கப்படும். திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் அவற்றின் பணி முழுவதும் முடிந்தவுடன் திறக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்புக்கு அதிகளவில் விமர்சனம் எழுந்தது. எனவே, தமிழக முதல்வர் இங்கு எல்லா பணிகளும் முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த மணி மண்டபங்கள் திறப்பு நிகழ்வில் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஆணையிட்டார். அந்த வகையில் அனைவரும் வந்துள்ளோம். இந்நிகழ்வு முலம் இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் நிரூபித்துள்ளார் என்றார்.
நிகழ்வில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ. சவுந்திரபாண்டியன், ந. தியாகராஜன், , செ. ஸ்டாலின்குமார், சீ. கதிரவன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வே. சரவணன்,நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, துணை மேயர் திவ்யா,மண்டல குழு தலைவர்கள் மதிவாணன் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, புஷ்பராஜ், ராமதாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட் ஆட்சியர் மா. பிரதீப்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்குப்பின் 3 மணிமண்டபங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 3 தலைவர்கள் தரப்பையும் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.