சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த அஸ்விணி, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி அளித்த அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த அழகேசன், கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாயிலில் வைத்து அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அக்கம் பக்கத்தினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.முகமது ஃபாரூக் விசாரித்து வந்தார். 5 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுள்ளதாக கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், ரூ.10,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.