திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.களத்தூர் கிராமத்தில், வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆ.ராசா பேசியபோது, “கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியோ, 56 இன்ச் மோடியோ வெளியே வராத நிலையில், அதனைத் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா பெருந்தொற்று சென்னை பெரும் வெள்ளம், ஊதாரித்தனமாக எடப்பாடி செலவு செய்த 5 லட்சம் கோடி ரூபாய் கடன் என மூன்று சவால்களையும் எதிர்கொண்டார். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி 4 ஆயிரம் வழங்கினார். அதேபோல், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை டில்லியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து பேசினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு, மகளிர் உரிமைத்துறை திட்டத்தை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், தொடர்ந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாதத்தையும், சாம்பாரையும் கொடுத்து மதிய உணவு திட்டத்தை காமராஜ் செயல்படுத்தினார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், காயையும், பருப்பையும் போட்டு சத்துணவு என்று ஆக்கினார். அது உண்மையான சத்துணவு என்று சொல்ல முடியாது. ஆனால் வாரத்தின் ஏழு நாட்களிலும் முட்டை கொடுத்து உண்மையான சத்துணவாக மாற்றியவர் கலைஞர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை சிற்றுண்டியையும் வழங்கி வருகிறார். இப்படி பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிற முதலமைச்சர் தான் உங்களிடத்திலே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அருண்நேருவை நிறுத்தி இருக்கிறார். உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என காட்சி ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். எதற்காக அழைக்கிறார் என்றால் இந்தியா பாதுகாப்பாக இல்லை என்பதற்காகத்தான், காப்பாற்ற அழைக்கிறார். குரங்கு கையில் கிடைத்த பூ மாலையை போல, கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் இந்தியா பாதுகாப்பாக இல்லை. இத்தேர்தல் அருண் நேருவுக்கான தேர்தலா? ராஜாவுக்கான தேர்தலா? அல்ல. பெரம்பலூருக்கான தேர்தலோ, தமிழ்நாட்டிற்கான தேர்தலோ அல்ல. இந்த தேர்தல் இந்தியாவுக்கானது. அரசியல் சட்டம் இருக்க வேண்டுமா? வேணாமா? அரசியல் சட்டம் இல்லை என்றால் இந்தியா உடைந்து விடும். ஆனால் மோடி சொல்கிறார் நான் மீண்டும் வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. ஒரே மதம், ஒரே மொழி அதுவும் இந்தி தான் இருக்கும், ஒரே உணவு, ஒரே உடை, ஒரே தேர்தல் என்று சொல்கிறார். எனவே இத்தேர்தலில் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டிட பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.