தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Filed under: அரசியல்,தமிழகம் |

கோவை விமான நிலையத்தில் இன்று பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம்,

“இதற்கு முன்பு ஆளுநராக உங்களை சந்தித்துள்ளேன். இப்போது முழு நேர அரசியல்வாதியாக செய்தியாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேர்தல் சுமூகமாக தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும். அதே நேரத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்களிப்பது என்பது ஒருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதற்கான அனைத்து ஆவணங்கள் இருந்த போதும் அவர்களது பெயர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து இருக்க வேண்டும். ‘பிரதமர் மோடி அனைவருக்குமான வளர்ச்சியையும் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். அதுவே காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் மற்றும் வறுமையில் உள்ள மக்களை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதி வருகிறது. 2006ம் ஆண்டு மன்மோகன் சிங் பேசியபோது நாட்டின் சொத்துக்கள் சிறுபான்மையினரின் உரிமை. இப்படி பேசியதை தவிர அவர்களுக்கான முன்னேற்றங்கள் எதையும் காங்கிரஸ் கட்சியினர் செய்யவில்லை. இஸ்லாமிய பெண்களின் முழு ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்து பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்ணுரிமை குறித்து பேசி வருகிறார். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை பயணம் மேற்கொள்ள நடவடிக்கை அவர் எடுக்கவில்லை. அதுவே பிரதமர் மோடி விஸா நடவடிக்கைகளை தளர்த்தி இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்வதற்கு வழிவகை செய்துள்ளார்” என தெரிவித்தார்.