விஜய் அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்!

Filed under: அரசியல்,சினிமா |

சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை மூலம் மாற்றம் என்ற பெயரில் நடிகர் ராகவா லாரன்ஸ் மே 1-ம் தேதி முதல் சேவை அமைப்பை தொடங்கியுள்ளார்.

இந்த அறக்கட்டளை மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து அதன்படி பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில், நான்காவது டிராக்டர் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி சதீஷ் என்பவருக்கு வழங்கிய ராகவா லாரன்ஸ் அந்த டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். முன்னதாக ராகவா லாரன்ஸூக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறோம். இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கூறினார். மேலும் இளையராஜா வைரமுத்து மோதல் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இச்சேவை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விக்கு, “நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார் அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்கள் நடிகர் விஜய் இடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். விஜய்யும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.