நேற்று குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழந்தான். குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குற்றாலத்தில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கானோர் நேற்று (17.05.2024) குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும், குளிக்கும் பகுதியில் இருக்கும் கம்பிகளில் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலரும் உடனடியாக களத்தில் இறங்கி சுற்றுலாப் பயணிகளை பேராபத்தில் இருந்து மீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டபோதும், நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் மாயமானான். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மாயமான சிறுவனை தேடினர். 2 மணி நேரத்திற்கும் மேலான தேடுதலுக்கு பிறகு சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டான். இச்சம்பவத்தை தொடர்ந்து குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐந்தருவி வனத்துறை வசம் உள்ளது. தற்போது பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள பழைய அருவி, பிரதான அருவி ஆகியவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.