கொந்தளிக்கும் இபிஎஸ்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக அரசுக்கு எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா என்று நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார்.‘Go Back Modi’என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார். இது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்? பாஜகவுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்னபோது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை திமுக முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா என்று கேட்க வேண்டும். டில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.