கோவை, ஏப்ரல் 26
வே. மாரீஸ்வரன்
தமிழகமெங்கும் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து திருப்பூர் மாநகர பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி போய் இருந்த நேரத்தில் குடிமகன்களுக்கு தங்குதடையின்றி சரக்கு விற்றுக் கொண்டிருந்த ஆசாமிகளை ரகசிய தகவலின் பேரில் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ். ஐ. ராஜேந்திர பிரசாத்துக்கு பல அதிர்ச்சித் தகவலை ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்கள் திருட்டு சரக்கை விற்ற மணிமுத்து மற்றும் மணிகண்டன் என்ற புள்ளிகள்.
திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் முதல் நிலை காவலர்களான அருணகிரிநாதன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் குமரன் ரோடு, பார்க் ரோடு, ரயில் நிலையம், மற்றும் ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எஸ்.ஐ.ராஜேந்திர பிரசாத்துக்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்பதாக ரகசிய தகவல் ஒன்று வந்து சேரவே, உடனே போலீஸ் டீமுடன் திருப்பூர் எஸ். வி. காலனி ஓம் சக்தி கோவில் ரோட்டிற்கு ரகசியமாக சென்றனர். அங்கு வெள்ளை நிற சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றபோது எஸ்.ஐ.ராஜேந்திர பிரசாத் மற்றும் அவரது போலீஸ் டீம் ஓடிச்சென்று லபக்கென்று அந்த ஆசாமியை பிடித்து சோதனை செய்தபோது அந்த சாக்குப்பையில் 10 ROMAN CASTLE பிராந்தி பாட்டில் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
அப்போது அந்த நபர் தனது பெயர் மணிமுத்து, ஓம் சக்தி கோவில் ரோடு, பிரிட்ஜ்வே காலனி, திருப்பூர் என்றும், கடந்த 25 /4 /2020/ அன்று பிரிட்ஜ்வே காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஒரு குவாட்டர் பாட்டில் ரூபாய் 250 வீதம் 48 குவாட்டர் பாட்டில்களை ரூபாய் 12 ஆயிரத்துக்கு வாங்கி 38 பாட்டில்களை தலா ஒரு பாட்டில் ரூபாய் 350 வீதம் 13 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்தேன் என்று மணிமுத்து ஒப்புதல் வாக்குமூலம் தந்தாராம். சுதாரித்துக்கொண்ட திருப்பூர் வடக்கு காவல் நிலையம் எஸ்.ஐ.ராஜேந்திர பிரசாத் தனது கஸ்டடியில் அழைத்துக்கொண்டு மணிகண்டனை தேடி சென்றனர். பின்பு ஒரு வழியாக மணிகண்டன் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்றபோது மணிகண்டன் தனது வீட்டிற்கு வெளியே நின்றிருப்பதை மணிமுத்து அடையாளம் காட்ட போலீஸ் டீம் மணிகண்டனை வளைத்து பிடித்து தனது கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரித்தது. அப்போது, மணிகண்டன் நான் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பதாகவும் தற்போது டாஸ்மார்க் கடை விடுமுறை என்பதால் பிராந்தி பாட்டில்களை திருட்டுத்தனமாக வாங்கிவந்து அதிக விலைக்கு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று 1எஸ் தொலைக்காட்சியில் திருப்பூர் நிருபராக பணி புரியும் எனது நண்பர்கள் பரூக் மற்றும் நவ்ஷாத் ஆகியோர் அதிக லாபத்திற்கு விற்க கூறியதால் கடந்த 25/ 4 /2020/ அன்று இரவு சுமார் 10 மணி அளவில் TN – 41- RP – 3313 என்ற வெள்ளை நிற காரில் வந்த பரூக் மற்றும் நவ்ஷாத் ஆகிய இருவரிடமும் ஒரு குவாட்டர் பாட்டில் ரூபாய் 200 வீதம் 106 குவார்ட்டர் பாட்டில்களை ரூபாய் 21, 200 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து நேற்று நூறு பாடல்களை தலா ஒரு பாட்டில் 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன் என்று மணிகண்டன் வாக்குமூலம் தருகிறார். மணிமுத்து மற்றும் மணிகண்டனை கைது செய்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் காவல்நிலைய குற்ற எண் 1091 /2020 ஆக பதிவு செய்து இந்திய தண்டனை சட்டப்பிரிவு 4 ( 1 ) a TNP Act படி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய திருப்பூர் தொலைக்காட்சி நிருபராக பணிபுரியும் பரூக் மற்றும் நவ்ஷாத் ஆகியோரை தேடி வருகின்றனர். பத்திரிக்கையாளர் போர்வையில் திருட்டு சரக்கு விற்ற விவகாரம் திருப்பூரில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் திருப்பூரில் பணிபுரியும் சில நேர்மையான பத்திரிக்கையாளர்கள்.