புதுச்சேரி,மே 6
கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லாத சூழலில் சுய தற்காப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் கிருமி தொற்றாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதும் தான் இப்போது நாம் செய்யக்கூடியவையாக உள்ளன. கொரோனா வைரஸ் கிருமியானது நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றது. அதனால் தான் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்கள், குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா கிருமியை எதிர்க்கும் ஆற்றல் நம் உடலுக்குள் இருந்தால் நாம் கிருமித் தொற்றால் நோயாளியாக மாற மாட்டோம். உணவு மூலமாகவும் மருந்துகள் மூலமாகவும் நமது நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தி வீரியமுள்ளதாக வைத்திருக்க முடியும்.
ஆயுஷ் அமைச்சகம் தனது ஆலோசனைத் தொகுப்பில் இந்திய மருத்துவ முறைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆயுர்வேத்தில் உள்ள நெல்லிக்காய் லேகியம், மஞ்சள் தூள் கலந்த பால், ஆவி பிடித்தல் போன்றவற்றை கடைபிடிக்க ஆயுஷ் அமைச்சகம் சொல்லியுள்ளது. நமது சித்த மருத்துவத்தைப் பொறுத்து நிலவேம்புக் குடிநீர் மற்றும் கபசுர குடி நீர் ஆகியவற்றை அருந்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஆர்சனிக்கம் ஆல்பம் 30 சி உருண்டை மாத்திரைகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் நம் நாட்டு மருத்துவம் இல்லையென்றாலும் சுமார் 100 ஆண்டுகளாக அது நம் நாட்டின் மருத்துவ முறைகளுள் ஒன்றாகவே மாறிவிட்டது. அதனால்தான் ஹோமியோபதி மருத்துவம் ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. நாட்டில் இதுபோல 10 இடங்களில் இத்தகைய மையங்கள் ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கி வருகின்றன. கோவிட்-19 காலத்தில் ஹோமியோபதியின் பங்களிப்பாக நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மாத்திரையைப் பொதுமக்களுக்கு வழங்குமாறு இந்தக் கவுன்சிலின் தலைமை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் அனில் குரானா அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ப புதுச்சேரி ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், கடந்த சில நாட்களாக ஆர்சனிக்கம் ஆல்பம் 30 சி உருண்டை மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.
இந்த மையத்தின் பொறுப்பு அதிகாரியான டாக்டர் ரவிகுமார் சதர்லா தனது குழுவினருடன் சென்ற வாரம் கம்பன் கலையரங்கில் நகராட்சி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மாத்திரைகளை வழங்கினார். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 3,200 பேர் மாத்திரைகளைப் பெற்று சென்றுள்ளனர்.
4.5.2020 திங்கட்கிழமை முதல் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறிச் சந்தையில் வந்து செல்வோருக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன, இந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 8,400 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
டாகடர் ரவிகுமார் சதர்லா, “ ஐந்து உருண்டை மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால் போதும். இதனால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. வேறு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இதைச் சாப்பிடலாம். எந்த வயதினரும் சாப்பிடலாம்” என்று தெரிவித்தார். டாக்டர் எஸ். வைஷ்ணவி காவேரி, டாக்டர் பி.மாதப்பன், டாக்டர் டி.திவ்யா ஆகிய மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வுக்கூட உதவியாளர்கள் என அனைவரும் ஒருங்கிணைத்து புதுச்சேரியில் சுமார் 12,000 பேருக்கு இந்த மாத்திரைகளை இலவசமாக வழங்கியுள்ளனர் என்பது சாதனைதான். இக்குழுவினர் மாத்திரைகள் தருவதோடு கொரோனா விழிப்புணர்வு பணியிலும் ஈடுபடுகின்றனர்.
கைகழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றோடு இந்த ஆர்சனிக்கம் ஆல்பம் 30 சி மாத்திரையையும் நாம் தற்காப்பு சாதனமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே கபசுர குடிநீரும் குடித்துக் கொள்ளலாம். எனக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்றக்கூடாது என நினைப்பவர்கள் இவற்றைக் கடைபிடித்தே ஆகவேண்டும்.