சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
கடந்த ஆண்டு 20 நாட்கள் நடைபெற்ற பட்டாசு விற்பனையை 10 நாட்களாக குறைத்தும், 70 அரங்குகள் அமைத்த இடத்தில் 50 சதவீத அரங்குகள் மட்டுமே அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக 3 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொரு கடைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 6 மீட்டர் இடைவெளியில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
தீவுத்திடலின் நுழைவு வாயிலில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு அங்கு பட்டாசு வாங்க வருவோரின் உடல்நிலைகள் கணக்கிடப்பட்டு கிருமிநாசினிகள் வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பட்டாசு வாங்க வருவோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றுவதற்கான பல்வேறு வசதிகள் தீவுத்திடலில் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் தீவுத்திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெறிக்கண் சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றிகொள்ளவும்