வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
புரவி புயலுக்கு பின் தமிழகத்தில் பகல் நேரத்தில் ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு வேளைகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் புதுசேரி முதலமைச்சர் நாராயணசாமி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.