இந்திய மக்களின் சமீபகால விழிப்புணர்ச்சி இந்திய அரசியல் கட்சிகளை ரொம்பவே அதிரவைத்துள்ளது. இந்திய மக்களை ஏமாற்றி ஆதரவு பெற்றுவந்த தேசிய கட்சிகள் தற்போது தேர்தல் கொள்கைகளை அறிவிக்க பயந்து நடுங்குகிறதாம். சாதி, மதம், இனங்களை கடந்து இந்திய மக்கள் ஓட்டளித்தது உலக வரலாற்றில் முக்கிய அதிரடி திருப்பம் என்கிறார்கள். தங்களுக்குத் தேவையான எதிர்கால அரசியலை இந்தியர்கள் தீர்மானித்து விட்டார்களாம். பொருளாதார வளர்ச்சியை அடியோடு குறைத்த காங்கிரஸ், அதை உயர்த்திபிடிக்க வழிதெரியாமல் 50 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் திணறுகிறது.
அயோத்தி, மதவாதம், இந்துமத உணர்வுகளை உசுப்பி கடைவிரித்த பா.ஜ.க.வும் தற்போது ஆடிப்போயுள்ளது. காரணம் நரேந்திரமோடியைத் தவிர வேறு எவரையும் சுட்டிக்காட்டும் துணிவு பா.ஜ.க.விற்கு இல்லை என்கிறார்கள். உண்மையில் மோடி பிரதமராவதைத் தடுக்க மிகப்பெரிய சதிவலை பா.ஜ.க.வில் உருவாகி உள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். காரணம் குஜராத் மக்களின் எழுச்சி, தென்னகம், மராட்டியம், கோவா மாநில மக்களை ஒருங்கிணைத்துவிடும். இதனால் வடஇந்திய பா.ஜ.க. தலைவர்களுக்கு ஆயுள் முழுவதும் ரிவிட் அடிக்கப்படும் பயம் எழுந்துள்ளதாக அலசப்படுகிறதாம். அதேபோல் சாதி, அரசியலை நம்பி பிழைப்பு நடத்திய மாநிலக் கட்சிகளை டெல்லி மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இந்திய மக்களின் ஒற்றுமை ஒருங்கிணையும் தருணம் வந்துவிட்டதாம். பிரதமர் பதவிக்கு இந்திராகாந்தி குடும்பத்தை மட்டும் விரல் காட்டிய அரசியல்வாதிகள் தற்போது தென்னகத்தை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.
சினிமா நடிகை என்று ஏளனப்படுத்திய இந்திய அறிவாளிகள் தற்போது அம்மாதான் என்று கை கூப்பும் நிலைக்கு தமிழக முதல்வர் எழுச்சி பெற்றுள்ளாராம். மோடி இல்லை என்றால் அம்மா பிரதமர் என்ற புதிய கோஷம் எழுந்துள்ளதாம். திருவரங்கம் தொகுதியில் வெற்றிபெற்று அரங்கநாதரின் அருள் பெற்ற புரட்சித்தலைவியைக் கண்டால் இலங்கை நடுங்குகிறதாம். காரணம் அரங்கநாதர் திருவரங்கத்தில் படுத்திருந்தாலும், அவரது கண்பார்வை இலங்கையில் பதிந்துள்ளதாகக் கூறுகிறார்கள். காங்கிரசின் இளையதளபதி ராகுல்காந்தி, அரசியல் முதிர்ச்சி இன்றி சில சமயம் உதிர்க்கும் வசனங்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறுகிறார்கள். மனிஷ்திவாரி, மணி சங்கர் ஐயர், புதுவை நாராயணசாமி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங் போன்றவர்கள் தற்போது காங்கிரசுக்கு எதிராக சேம்சைடுகோல் போட்டுக்கொண்டிருப்பதாக இந்திய அரசியல் அறிவாளிகள் கவலை கொள்கிறார்கள். தங்கள் பதவி ஒன்றே குறி என்ற நோக்கத்துடன் இவர்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் தற்போது தலைநகரில் ஏளனமாக அலசப்படுகிறார்கள். காரணம் மதுவிலக்கை எதிர்க்கும் இவர்கள், இந்தக் கட்சிகளின் தொண்டர்கள் தமிழக அரசுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாம். கேப்டனின் அதிரடி சினிமா வசனங்கள் நடைமுறை அரசியலில் செல்லாக்காசாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழக முதல்வரை எதிர்க்க உறுதியான கூட்டணியை ஏற்படுத்த முடியாமல் தங்கள் வறட்டு கௌரவத்தினால் தமிழக மக்களின் மொத்த ஆதரவை இழக்கும் நிலையை எட்டிவிட்டார்களாம்.
பா.ஜ.க., காங்கிரசு, தி.மு.க., தே.மு.தி.க., பாராளுமன்ற தேர்தலில் செயல்பட்டாலும், தமிழக முதல்வரின் அரசியல் எழுச்சி இந்திய தேசிய கட்சிகளை கலங்கவைத்துள்ளதாம்.
நாளைய தொங்கு பாராளுமன்றத்தில் தேவகௌடா, ஜகன்மோகன் ரெட்டி, மராட்டிய சரத்பவார், தமிழக ராமதாஸ், ஆம் ஆத்மி கட்சி, வங்காள மம்தா, ஒரிசாவின் நவீன் பட்நாயக், ஆந்திர சந்திரபாபு நாயுடு, மராட்டிய சிவசேனா, அசாம் கன பரிஷத், உத்திரபிரதேச முலாயம் கட்சி தமிழக முதல்வருக்கு பிரதமராக தோள் கொடுக்கும் சூழ்நிலை உண்டாகும் என்று தலைநகரில் அடித்துக் கூறுகிறார்கள். தமிழக முதல்வர் பிரதமர் ஆவாரா அல்லது பிரதமரை நியமித்து, இந்தியாவை ஆட்சி செய்யும் புரட்சித்தலைவியாக தோன்றுவாரா என்ற அரசியல் பட்டிமன்றம் பாராளுமன்ற மையஹாலில் தினமும் நடக்க ஆரம்பித்துள்ளது.