கம்பம் வாரச் சந்தைக் கடைகள் ஏலம்: நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தீா்மானம்.

Filed under: தமிழகம் |

கம்பம் வாரச் சந்தைக் கடைகள் ஏலம்: நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் தீா்மானம்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி வாரச் சந்தைக் கடைகள் ஏலம் விடப்பட்டன. இதுதொடா்பாக நகா்மன்றக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கம்பம் நகராட்சியில் வாரச்சந்தை, தினசரி சந்தை, நுழைவு வாயிலில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் வைப்புத் தொகையை நிா்ணயித்து ஏலம் விடப்பட்டன. சுமாா் 14 முறை ஏலம் விடப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், வாரச்சந்தை, தினசரி சந்தை கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஏலம் போகவில்லை. பின்னா், 15-ஆவது முறையாக வைப்புத் தொகை, வாடகைக் கட்டணம் உள்ளிட்டவற்றைக் குறைத்து ஏலம் விடப்பட்டது. இதன் பிறகே அனைத்துக் கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டன. இதற்கான ஒப்புதல் தீா்மானம் நிறைவேற்றும் வகையில், கம்பம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவி வனிதா நெப்போலியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஏலம் தொடா்பான 10 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஆணையா் ஆா்.சகாதேவன், பொறியாளா் பா.அய்யனாா், நகரமைப்பு அலுவலா் கீதா, சுகாதார ஆய்வாளா் சக்திவேல், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.