தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா.

Filed under: தமிழகம் |

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை
பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா.

தேனி கானா விலக்கு அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் முறைகளில் இழைக்கண்ணாடியில் பாதுகாக்கப்படுவது என்பது ஒரு புதிய முயற்சி தொடக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டினேஷன் என்னும் முறை முதன்முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த “கந்தர்” என்பவரால் 1977 -ல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒருசில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் அரசாங்க மருத்துவக்கல்லூரிகளில், அரசு தேனி மருத்துவக் கல்லூரியில் தான் முதன்முறையாக இம்முறை செய்யப்பட்டுள்ளது. இம்முறை உடற்கூறியல் துறைத்தலைவரான மருத்துவர் எழிலரசன் என்பவரால் 2012-ல் ஆரம்பிக்கப்பட்டது.

இப்போது இந்த பிளாஸ்டினேஷன் செய்த உடல் உறுப்புகள் மற்றும் அதன் முழு உடலைப் பாதுகாப்பாக வைக்க, பைபர் கிளாஸ் எம்பெட்டிங் என்ற புதிய முறையை உலகில் முதன் முதலில் அரசு தேனி மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
இதற்கு காப்புரிமையும் வேண்டி விண்ணப்பித்துள்ளோம்.

இம்முறையில் மனித சந்தையில் கிடைக்கும் பிசின் (Resin) என்ற இரசாயனப்பொருளை உயர் வெப்பத்தில் (High Temperature-100 டிகிரி சென்டிகிரேட்) பிளாஸ்டினேஷன் செய்யப்பட்ட உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் மீது ஊற்றப்பட்டு மிகவும் குறைவான வெப்பம் (20 டிகிரி சென்டிகிரேட்) உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்து பின் அவைகள் உலரவைக்கப்படுகிறது.

இந்த பைபர் கிளாஸ் எம்பெட்டிங் முறையில் தயாரிக்கப்படும் உறுப்புக்கள் மற்றும் மனித உடல்களை எளிதில் அழிக்கமுடியாது.
வருடக்கணக்கில் பாதுகாப்பாக வைக்கலாம். மேலும் இம்முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. பார்மலின் திரவத்தின் பக்கவிளைவுகள் ஏதுமற்றது.

உடற்கூறியல் துறையில் மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம். நோய்க்குறியியல் துறைக்கான மாதிரிகளையும் இம்முறையில் பயன்படுத்தலாம். குறைபாடுள்ள சிசுக்கள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வேண்டாத மனித உறுப்புக்கள், குறுக்கு வெட்டு மாதிரிகள் போன்றவற்றையும் சம்பந்தப்பட்ட துறைகளில் வைத்து மாணவர்களின் கல்விக்கு உபயோகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.