திருச்சி மாவட்டத்தில் 30,003 பேர் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர்

Filed under: தமிழகம் |

திருச்சி மாவட்டத்தில் 30,003 பேர் பிளஸ்டூ தேர்வு எழுதுகின்றனர்

11ஆம் வகுப்பிற்கு 32,313 பேரும் பங்கேற்கின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மார்ச் 1-ந் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 30,003 பேரும், 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 32,313 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மார்ச 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 4 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் மார்ச் 26 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறவுள்ளன. திருச்சி வருவாய் மாவட்டத்தில் திருச்சி மற்றும் லால்குடி என 2 கல்வி மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இவற்றில், மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 13,603 மாணவர்களும் 16,400 மாணவிகளும் என மொத்தம் 30,.003 பேர் பங்கேற்கவுள்ளனர்.

அதேபோல 4 ஆம் தேதி தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 15,211 மாணவர்கள்,17,102 மாணவியர் என மொத்தம் 32,313 பேர் பங்கேற்கவுள்ளனர்.
திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், மத்திய சிறையில் 1, லால்குடி கல்வி மாவட்டத்தில் 60 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 131 தேர்வு மையங்கள் அமைந்துள்ளன. தனித்தேர்வர்களுக்கு 12 ஆம் வகுப்புக்கு 9, மற்றும் 11 ஆம் வகுப்புக்கு 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல வினாத்தாள்கள் கட்டுக் காப்பகங்கள் லால்குடியில் 3, திருச்சியில் 2 என மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய சிறையிலேயே சிறைக்கைதிகளுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு மேல்நிலை முதலாம் ஆண்டில் 35 சிறை தேர்வர்களும், மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 9 சிறை தேர்வர்களும் ஆக மொத்தம் 44 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

வினாத்தாள் கட்டுக் காப்பகங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும்படையும் அமைக்கப்பட்டுள்ளது.