வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதால் தேனியில் செய்தியாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம்.
நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,தேனி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை என்னும் பணி தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது.மேலும் 8:45 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கியது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு செய்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்து சேகரிக்க அனுமதி இல்லை என்றும் செய்தியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக அறையில் மட்டும்தான் அமர வேண்டும் என்றும் அந்த அறையை விட்டு வெளியே வரக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.செய்தியாளர்கள் மாவட்ட நிர்வாகம் வழங்கும் தகவல்களை நம்பி மட்டுமே செய்திகளை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அதனையும் தாண்டி ஊடகங்களில் நான்காவது சுற்று முடிவுகள் வெளியான நிலையிலும் காலை 10:30 மணியை தாண்டியும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்தி மக்கள் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையால் முதல் சுற்று முடிவுகள் கூட வெளியிடப்படவில்லை.மேலும் தபால் வாக்கு முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய பதில் அளிக்காததால்,ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஊர்வலமாக சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த தேனி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சஜீவனம் செய்தியாளர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார்.
இதனைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விவேகானந்தன் மற்றும் சுகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நேரத்தில் முடிவுகள் தங்களுக்கு கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை செய்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். செய்தியாளர்களின் இந்தப் போராட்டம் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.