கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்.
கமுதியில் ராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், கல் மண்டபங்கள், சுவாமி சிலைகள் சீரமைக்கப்பட்டது.
விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனை முடிந்து கடம் புறப்பாட்டுக்கு பின்பு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் மேல் விமானம், ராஜகோபுரம், மூலஸ்தானத்தில் உள்ள கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது.
மீனாட்சிக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. திருப்பணிக் குழு தலைவர் காதர்பாட்ஷா தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இரவு அலங்காரத்தில் சுவாமிகள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன், டி.ஐ.ஜி.,துரை, எஸ்.பி.,சந்தீஷ், எம்.பி., நவாஸ்கனி, தாசில்தார் சேதுராமன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை செயலாளர்கள் நாராயணமூர்த்தி, பாஸ்கரபூபதி, பொருளாளர்கள் கிருஷ்ணன், ராஜாராம், துணைத்தலைவர்கள் போஸ் தேவர், வாசுதேவன், ராமமூர்த்தி மற்றும் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.