மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு.
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை சார்பில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு, அஞ்சல்துறையில் மகிளா சேமிப்பு பத்திரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேர்ந்து பயன்பெற முடியும். குறைந்த பட்சம் ரூ. 1000 முதல் ரூ. 2 லட்சம் வரையில் இதில் முதலீடு செய்யலாம். ஒருவர், ஒரு கணக்கு தொடங்கி 3 மாதம் கழித்து அடுத்தது என்ற வகையில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்க முடியும். முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.5 சதவிகித வட்டி வழங்கப்படும். நிகழாண்டு திட்டத்தில் சேர மார்ச் 31 கடைசி நாளாகும்.
இதனையொட்டி திருச்சி மத்திய மண்டலத்தில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு முகாம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் முதலீடு செய்தவர்களில் அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி மத்திய மண்டலத்தில்,
திருச்சி தலைமை அஞ்சலகத்தில் முதலீடு செய்த ஜே. சங்கீதா, மற்றும் பெல் அஞ்சலகத்தில் முதலீடு செய்த எஸ். டார்த்திஹீபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.