தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்:

Filed under: தமிழகம் |

தமிழகம் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றிற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலானu கூட்டணியில், தோழமை கட்சிகளிடையே பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு தொகுதிகள் பங்கீடு அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் தொகுதி பங்கீடாக அறிவிக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் மாநில பொதுக்குழு சிறப்புக் கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.

கட்சியின் தேசியத் தலைவரான பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர், பொருளாளர் ஷாஜகான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப்பின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவுக்கும் நன்றி. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜ அரசு, இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்து வேறுபடுத்தி, ஜனநாயக நடைமுறைகளை, இந்திய அரசியல் சாசன சம்பிரதாயங்களை, 75 ஆண்டுகள் இந்திய நாட்டில் பின்பற்றக்கூடிய நடைமுறைகளை சிதைத்து, குலைத்து அராஜக ஆட்சியை நடத்தி வருகிறது. இதனால், அந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், இண்டியா கூட்டணி வெற்றி பெற, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாடுபட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தொகுதி மக்கள், அனைத்து கட்சியினரின் நன்மதிப்பை பெற்று சிறந்த எம்பி பணியாற்றி வரும், நவாஸ் கனி, மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். இந்த 3 தீர்மானங்களும் இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்காக நிதிக்குழு, பணிக்குழு, பிரச்சாரக்குழு என பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு படிப்படியாக தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது. வரும் ஓரிரு நாட்களில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் உள்ள திமுக மதச்சார்பற்ற கூட்டணியும், அகில இந்திய இக்கூட்டணி இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணியும், தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதோடு, அகில இந்திய அளவில் பெரிய வெற்றியை பெற்று அரசியல், ஆட்சி மாற்றத்தை நிச்சயமாக உருவாக்கும் நிலையில் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது தான் தெளிவான உண்மை. திமுக கூட்டணியில், சகோதார கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதில் வரவேற்கும் முதல்கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தான். அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து போட்டியிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு காதர்மொகிதீன் கூறினார்.

இதன்மூலம், தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியின் முதல் வேட்பாளராக இ.யூ.மு.லீ. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக நிர்வாகிகளே எதிர்க்கவில்லை

கூட்டத்தில், வேட்பாளரும், தற்போதைய ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி கூறுகையில்‘‘தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எந்தக் கூட்டணியில், எந்தச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று பேசி வரும் நிலையில், முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். பல தொகுதிகளில், தற்போதைய எம்பிகளுக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது என திமுக நிர்வாகிகளும், அவர்களது கட்சியினருமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்தப்பிரச்னையும் இல்லாமல், ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கியதோடு, மீண்டும் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ள என் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு ரயில்வே திட்டங்கள் உட்பட ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளேன். அதன்மூலம், நிச்சயம் இத்தேர்தலிலும் வெற்றி பெறுவேன்’’, என்றார்.