இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர் மோடியை 20 ஓவர் உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

20 ஓவர் உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று காலை நாடு திரும்பினர். டில்லி விமான நிலையத்திற்கு காலை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய அணி வந்திறங்கியது. இந்திய அணி வீரர்கள் வருகையை முன்னிட்டு காலை முதலே விமான நிலையம் முன் ரசிகர்கள் திரண்டனர். தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த இந்திய வீரர்கள் விராட் கோலி, முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விமான நிலையத்தில் கேப்டன் ரோகித் சர்மா, வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினார். மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்களுடன் இந்திய வீரர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து நட்சத்திர விடுதிக்கு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிரவிட் உள்ளிட்ட இந்திய குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வீரர்கள், சிறப்பு ஜெர்சியை அணிந்து கொண்டு இன்று காலை 11 மணி அளவில் உலக கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். மாலை 5 மணிக்கு மும்பை செல்லும் வீரர்கள், திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்று ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர். இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளன.