உகாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

Filed under: இந்தியா,உலகம் |

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உகாண்டா அதிபர் யோவேரி காகுட்டா முசேவேனியுடன் இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சுகாதாரத் துறை சவால்கள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர். இப்போதைய சுகாதார நெருக்கடி நேரத்தில் தனது ஆப்பிரிக்க நண்பர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்று உகாண்டா அதிபர் முசேவேனியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். உகாண்டாவில் இந்த நோய் பரவாமல் தடுப்பதில், அந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைத்து வகையிலும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

உகாண்டாவில் உள்ள இந்தியர்கள் மீது நல்லெண்ணம், அக்கறை காட்டி வருவதற்காகவும், இப்போதைய நிலையில் அளித்து வரும் ஆதரவிற்காகவும் உகாண்டாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஜூலை 2018ல் உகாண்டாவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி,  இந்தியா – உகாண்டா உறவின் சிறப்பியல்புகள் பற்றிக் குறிப்பிட்டார்.

கோவிட்-19 சவாலை உலகம் விரைவில் வெற்றி கொள்ளும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.