குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இந்தியக் கடற்படை !

Filed under: இந்தியா |

மும்பை : கோவிட்-19 முடக்கநிலை அமல் காலத்தில் மும்பையில் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதற்காக, அடிப்படை உணவுப் பொருட்களைக் கொண்ட ரேஷன் பைகளை இந்திய கடற்படை நிர்வாகம் மாநில அரசிடம் ஒப்படைத்தது. மும்பையில் தவித்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஏப்ரல் 4 மற்றும் 8 ஆம் தேதிகளில் இவை வழங்கப்பட்டன.

முடக்கநிலை காலத்தில் தவித்து வரும் குடிபெயர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும் என்று மும்பை மாநகர மாவட்ட ஆட்சியர், இந்திய கடற்படை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். அதுபற்றி பரிசீலித்த மேற்கு கடற்படை கமாண்ட் பிரிவு ஏப்ரல் 4 ஆம் தேதி 250 ரேஷன் பைகளுக்கு ஏற்பாடு செய்தது. அதில் போதிய அளவுக்கு உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. முசாபிர்கானா அருகே உள்ளாட்சி அதிகாரிகளிடமும், ஏசியாட்டிக் நூலகம் அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவை அளிக்கப்பட்டன. கஃபே அணிவகுப்பு மைதானம் மற்றும் கல்பா தேவி பகுதிகளில் விநியோக மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஏப்ரல் 8 ஆம் தேதி மேலும் 500 ரேஷன் பைகள் உள்ளாட்சி அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. கமதிபுரா பகுதியில் சிக்கியுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரேஷன் பொருட்கள் உள்ள பைகள் வழங்கப்பட்டன.