உத்தர பிரதேசத்தில் வன்முறை: ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது

Filed under: அரசியல்,இந்தியா |

லக்கிம்பூர், அக் 4:
உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும், விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது போராட்டத்தில் இருந்த விவசாயிகளும், அண்டை கிராம மக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க திகுனியாவில் குவிந்தனர். பாஜகவினர் அணிவகுப்பு அவ்வழியாக சென்ற போது அதில் வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 விவசாயிகள் பலியானாதால் ஆத்திரமடைந்த மக்கள், பாஜகவினரின் கார்களை அடித்து நொறுக்கினர்.

பின் அங்கு வெடித்த வன்முறையில், மொத்தம் 8 பேர் பலியாக உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த கார் விபத்தை, மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.கவை சேர்ந்தவருமான அஜய் குமார் மிஸ்ரா என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இதை, அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு நேரில் சென்றார்.

எனினும், அவரை மாவட்ட எல்லையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், அங்கு வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.